திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனம், ஆர்ஜித சேவைகள் மற்றும் அறைகள் முன்பதிவு செய்வதாகக் கூறி இணையதளங்களில் நடைபெற்று வரும் பணமோசடிகளைத் தவிர்க்க, தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கைபேசி செயலி மூலமாக மட்டுமே பக்தர்கள் முன்பதிவுகளைச் செய்ய வேண்டும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்களின் தரிசன டிக்கெட்டுகள், சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் மற்றும் திருமலையில் தங்குவதற்கான அறைகளை தேவஸ்தானத்தின் ஆன்லைன் மையம் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதனைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில சைபர் குற்றவாளிகள் மற்றும் மோசடி கும்பல்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரிலும், அதன் முகவரியைப் போன்று போலியான இணையதள முகவரிகளையும் (Fake Websites) மற்றும் சமூக வலைத்தளங்களில் போலி இணைப்புகளையும் (Fake Links) உருவாக்கி, டிக்கெட் மற்றும் அறைகள் பதிவு செய்து தருவதாகக் கூறி பக்தர்களிடம் பெருந்தொகையைப் பெற்று ஏமாற்றி வருவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன.
இப்பிரச்சனை குறித்துத் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கை அறிக்கையில், “போலி இணையதள மோசடிகளைத் தவிர்க்க, பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (ttdevasthanams.ap.gov.in) அல்லது ‘TTDevasthanam’ என்ற அதிகாரப்பூர்வ கைபேசி செயலி (Mobile App) மூலமாக மட்டுமே தரிசனம் மற்றும் தங்குமிடங்களை முன்பதிவு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், “சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் உலா வரும் போலியான விளம்பர இணைப்புகளை (Links) நம்பி பணத்தைச் செலுத்தி ஏமாற வேண்டாம். தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் சேவைகளைச் சரிபார்த்துப் பயன்படுத்த வேண்டும்” எனப் பக்தர்களுக்குத் தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் முன்பதிவு குறித்த தேவஸ்தானத்தின் இந்த அவசர எச்சரிக்கை ஏழுமலையான் பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.













