செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், கண்ணகப்பட்டு மற்றும் காலவாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பல விவசாயிகள், கோயிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் நிலங்களில் பல ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலங்கள் தவறுதலாக கோயில் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீண்டும் விவசாயிகளின் பெயரில் மாற்ற வேண்டும் என்றும் கோரி பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக சில விவசாயிகள் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் கோயில் நிலங்களை தனிநபர்களிடமிருந்து மீட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து சுமார் 230 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு கோயிலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. மேலும் அந்த நிலங்கள் கோயில் சொத்துகள் என அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. தற்போது விவசாயிகள் மீண்டும் உழவு பணிகளை தொடங்கிய நிலையில், கோயில் நிர்வாகம் எச்சரிக்கை பலகைகள் வைத்து, அனுமதியின்றி விவசாயம் செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க திருப்போரூர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், “இந்த நிலங்கள்தான் எங்களின் வாழ்வாதாரம். நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
