Advertisement

வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில், சித்திரை பெருவிழாவையொட்டி நடைபெற்ற மகா தேரோட்டம் நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது. திரிபுரசுந்தரி அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சியால் திருக்கழுக்குன்றமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழாவில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. கடந்த 23-ஆம் தேதி வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் வேதகிரீஸ்வரரும், 63 நாயன்மார்களும் மாடவீதிகளில் கிரிவலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

Advertisement

இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் கோவில் வளாகத்தைச் சுற்றி வந்து, கிழக்கு ராஜகோபுரம் வழியாகக் கடந்து தங்களுக்குரிய திருத்தேர்களில் எழுந்தருளினர். மேள தாளங்கள் முழங்கத் தொடங்கிய தேரோட்டம், மேட்டுத் தெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் வீதி, கவரை தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தும், தேங்காய்களை உடைத்தும் சுவாமி தரிசனம் செய்தனர். பகல் 12:30 மணியளவில் திருத்தேர்கள் அனைத்தும் அதன் நிலையை வந்தடைந்தன.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும், ஊர் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். நாளை மறுநாள் இரவு கொடி இறக்கப்பட்டு, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா உத்சவம் நிறைவுபெறுகிறது. திருவிழாவையொட்டி திருக்கழுக்குன்றம் நகரெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement