Home செங்கல்பட்டு அதிமுக ஒரு கட்டுப்பாட்டில் இல்லை; தவெக அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.. ப.சிதம்பரம் அதிரடி!

அதிமுக ஒரு கட்டுப்பாட்டில் இல்லை; தவெக அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.. ப.சிதம்பரம் அதிரடி!

0

காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக வெற்றிக் கழக அரசு நல்லாட்சி தர வாழ்த்துவதாகவும், கட்டுப்பாடின்றி இருக்கும் அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிய உள்கட்டமைப்புடன் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு நிலையான அரசாக மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்றும், புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்குப் போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தார்மீகத் தொனியோடு காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டார். “காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வெற்றி பெறவில்லை என்றாலும், மக்கள் தீர்ப்புக்கு அடக்கத்துடன் தலைவணங்குகிறோம். கட்சி ஆரம்பித்து வெறும் 2 ஆண்டுகளிலேயே 35 சதவீத வாக்குவங்கி பெற்று ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்; கடந்த வாரமே அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினேன். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியோ அல்லது மறுதேர்தலோ வருவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான், காங்கிரஸ் தலைமை தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. புதிய அமைச்சர்கள் அனுபவமில்லாதவர்கள் என்பதால், இந்த அரசுக்கு மக்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றார். மேலும், மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் பதிவு செய்தார்.

தொடர்ந்து தேசிய அரசியல் மற்றும் கூட்டணிக் குழப்பங்கள் குறித்துப் பேசிய அவர், “திமுக ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் இருந்து விலகியதாக எனக்குத் தெரியவில்லை. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பதவியில் இருப்பது சாதனைதான் என்றாலும், ஜவஹர்லால் நேரு 1952 முதல் 1964 வரை மட்டுமன்றி, அதற்கு முன்பாக 1947 முதல் 1952 வரையிலும் பிரதமராக இருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியுள்ளார்; அக்கட்சியில் அவர் சரியாக மதிக்கப்படவில்லை என்பதை அவரது பேட்டி உணர்த்துகிறது. அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தற்பொழுது ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டில் இல்லை. அதனால்தான், அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்து விலகி மாற்றுத் தேடல்களை நோக்கி ஓடுகிறார்கள்” என்று அரசியல் அனல் பறக்கக் கருத்துத் தெரிவித்தார்.

 

 

 

 

NO COMMENTS

Exit mobile version