மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்ட தமிழ்நாடு அரசின் முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும், முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக் காரசாரமாக வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடனான பேச்சுவார்த்தை குறித்துத் தமிழக அரசியல் களத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நெல்லை முகமது முபாரக் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தனது கண்டனத்தையும் கவலையையும் பதிவு செய்துள்ளார்.
அவரது அறிக்கையில், “மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டதாக வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன. ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளன. இந்நிலையில், மீண்டும் கர்நாடகாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது நமது சட்டரீதியான உரிமையைப் பலவீனப்படுத்துவதோடு, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் சட்ட வலிமையையும் குறைத்துவிடும் ஆபத்தைக் கொண்டது” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து தவெக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அவர், “தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையான காவிரி நீர் உரிமையை எந்தவொரு காரணத்தைக் கொண்டும், எந்தவொரு அரசியல் சூழலிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. எனவே, மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் உடனடியாகக் கைவிட வேண்டும். சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அரசு உறுதியோடு நிற்க வேண்டும்” என ஆணித்தரமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். முகமது முபாரக்கின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.













