Advertisement
,

விலகிய தர்பூசணி மர்மம்.. உடலில் மார்ஃபின் விஷம் கண்டறியப்பட்ட அதிர்ச்சித் தகவல்!

மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில், தற்போது புதிய மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புக்குத் தர்பூசணி காரணம் அல்ல என்பதும், அவர்கள் உடலில் சக்திவாய்ந்த விஷம் இருந்ததும் தடயவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த அப்துல்லா என்பவர், கடந்த வாரம் தனது உறவினர்களுக்குப் பிரியாணி விருந்து அளித்துள்ளார். விருந்தினர்கள் சென்ற பிறகு, அப்துல்லா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே அவர்கள் அனைவருக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; ஆனால் சிகிச்சை பலனின்றி நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

தர்பூசணி சாப்பிட்டதால் தான் இந்த மரணங்கள் நிகழ்ந்தன என்ற செய்தி காட்டுத்தீயாகப் பரவியதால், சந்தையில் தர்பூசணி விலை கடுமையாகச் சரிந்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை முடிவுகள் வேறு ஒரு திசையைக் காட்டுகின்றன:

இறந்தவர்களின் மூளை, இதயம் மற்றும் சிறுகுடல் ஆகியவை பச்சை நிறமாக மாறியிருந்தது கண்டறியப்பட்டது. இது வழக்கமான உணவு நச்சினால் (Food Poisoning) ஏற்பட்ட மரணம் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மர்மத்தை அதிகரிக்கும் விதமாக, அப்துல்லாவின் உடலில் ‘மார்ஃபின்’ (Morphine) எனப்படும் சக்திவாய்ந்த வலி நிவாரணி மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) இந்த உயிரிழப்புக்கும் தர்பூசணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால், போலீசார் பின்வரும் கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்கள் மார்ஃபின் மருந்தை ஏற்கனவே உட்கொண்டு வந்தார்களா அல்லது தற்செயலாக உட்கொண்டார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

குடும்பத்தினர் கடும் மன அழுத்தத்தில் இருந்தார்களா அல்லது இது தற்கொலை முயற்சியாக இருக்கலாமா என்ற கோணத்திலும் ஆய்வு செய்யப்படுகிறது. தர்பூசணியில் யாரேனும் விஷம் கலந்தார்களா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இறுதி முடிவைத் தெரிவிப்பதற்காக உடல் உறுப்புகள் ரசாயன ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement