திமுகவும், அதிமுகவும் உள்ளடி ஒப்பந்தம் மற்றும் ரகசியக் கூட்டணி அமைத்து எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்; அதனைப் பார்த்தே நல்லெண்ணமும், அம்மா (ஜெயலலிதா) மீது விசுவாசமும் உடையவர்கள் அங்கு இருக்க விரும்பாமல், தமிழகத்திற்குச் சிறந்த ஆட்சியைத் தரக்கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் விஜய் மட்டும்தான் என்ற தார்மீக அடிப்படையில் தவெக-வில் இணைந்துள்ளனர் என்று மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சென்னைக்குக் கிளம்பும் முன்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் விமரிசனங்களுக்கு அக்குவேறாகப் பதிலடி தந்தார். அவர் பேசியதாவது:
எம்எல்ஏக்கள் விலகலும் சி.வி.சண்முகம் டீமும்: “திமுக, அதிமுக இரண்டும் இணைந்து கூட்டு ஆட்சி அமைப்பது பற்றிச் சிந்திப்பதே மிகப்பெரிய தவறல்லவா? அவர்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகளைத் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டு பேசுவது சரியான உத்தியல்ல, இதற்குக் காலம் நல்ல பதிலைச் சொல்லும். சி.வி.சண்முகம் அணியிலிருந்து விலகி தற்பொழுது மூன்று எம்எல்ஏக்கள் தெளிவாக முடிவெடுத்து வந்துள்ளனர். யாருக்கும் எந்த முரண்பாடும் இல்லை, எல்லோரும் தங்களது மனநிலைக்கேற்பத் தெளிவாக முடிவெடுக்கிறார்கள்.”
“மாநிலத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களைச் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் சிசிடிவி ஆதாரங்கள் மூலம் குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறோம். முதலமைச்சர் விஜய் இதனை நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். இவரைப் போன்று எந்த முதலமைச்சரும் இவ்வளவு வேகமாகச் செயல்பட்டதில்லை. குற்றங்களைத் தடுக்கவே தனிப்படை அமைத்து, அதற்கெனப் புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.”
ஆட்சிப் பொறுப்பேற்று 5 அல்லது 10 நாட்களுக்குள் எப்படி வெள்ளை அறிக்கை கொடுக்க முடியும்? மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிநிலைகளையும் முழுமையாகப் பார்த்துத்தான் கொடுக்க வேண்டும். வெள்ளையறிக்கை கொடுப்போம் என்றால் அதற்கு ஏதோ வெள்ளை பேப்பரையா காட்ட முடியும்? பெண்களுக்கு வரலாற்றில் இல்லாத பாதுகாப்பை அளித்து வரும் தெளிவான சிந்தனை உடையவர் நமது முதலமைச்சர்.
இறுதியாகப் பேசிய அவர், “பதவியேற்று 6 மாத காலம் பொறுத்திருப்போம், அதற்குப் பிறகுதான் கேள்வி கேட்போம் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துவிட்டு, தற்பொழுது 8 அல்லது 10 நாட்களிலேயே இப்படி கேள்வி எழுப்பிக் கதறுவது ஏன்? கொள்கை ரீதியாக உள்ள இந்த தவெக நல்லரசுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பக்கபலமாக இருக்கின்றன; இந்த ஆட்சி ஒரு சிறந்த ஆட்சி என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்” என்று எவ்வித நெகோஷியேஷனும் இன்றி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.





