Home செங்கல்பட்டு சாலையோரத்தில் பணம்… போலீசில் ஒப்படைத்த நடைபாதை வியாபாரி

சாலையோரத்தில் பணம்… போலீசில் ஒப்படைத்த நடைபாதை வியாபாரி

0

மாமல்லபுரத்தில் சாலையோரம் கிடந்த பணப்பையை உரியவரிடம் சேர்க்கும் நோக்கில் போலீசாரிடம் ஒப்படைத்த நடைபாதை வியாபாரியின் நேர்மை பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மாமல்லபுரம் நகராட்சிக்குட்பட்ட வெண்புருஷம் பகுதியைச் சேர்ந்த வேதகிரி (57), ஐந்துரதம் பகுதியில் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த ஒரு கைப்பையை கண்டெடுத்தார்.

அதை திறந்து பார்த்தபோது, அதனுள் ரூ.6,610 ரொக்கப் பணம் மற்றும் ஓட்டல் ரசீது இருந்தது. ஆனால், பணப்பையின் உரிமையாளரை அடையாளம் காணும் வகையில் பெயர், முகவரி அல்லது தொடர்பு விவரங்கள் எதுவும் இல்லை.

இதையடுத்து, பணத்தை தன்வசம் வைத்துக்கொள்ளாமல், சம்பந்தப்பட்டவரிடம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் வேதகிரி தனது வியாபாரம் முடிந்ததும் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று, டிஎஸ்பி அறிவழகனிடம் பணப்பையை ஒப்படைத்தார்.

வேதகிரியின் நேர்மையை பாராட்டிய டிஎஸ்பி அறிவழகன், அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர், பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்குமாறு மாமல்லபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தர்மலிங்கத்திடம் வழங்கினார்.

மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பணப்பையை தவறவிட்ட நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டவுடன், வேதகிரியே நேரடியாக பணப்பையை ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

வேதகிரியின் இந்த நேர்மையான செயலை சக வியாபாரிகளும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version