Advertisement

மலையாள நடிகை பாலியல் பலாத்கார வழக்கு – நடிகர் திலீப் விடுதலை

இந்திய திரையுலகையே அதிர வைத்த கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உள்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் சுனில் என்ற நபர் நடிகையைப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்டது. மேலும், இதை வீடியோவாக எடுத்து பிளாக் மெயில் செய்யவும் பல்சர் சுனில் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. காரில் கடத்தப்பட்ட அந்த நடிகை, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டார். அன்றைய தினமே அந்த நடிகை போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். இந்த சம்பவம் மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்தது.

Advertisement

வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கிய நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக அந்த நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனில் தானாகவே முன்வந்து சரணடைந்து முக்கியக் குற்றவாளியானார். செல்போன் பதிவுகள் அடிப்படையில் நடந்த விசாரணையில் மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் அவர் 8வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். குற்றச் சதி, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதியப்பட்டது. ஐடி சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போலீசார் விசாரணையில் திலீப் தான் இந்த வன்கொடுமையைத் திட்டமிட்டே நடத்தியதாகக் கூறப்பட்டது. அவருக்கும் அந்த நடிகைக்கும் முன்கூட்டியே பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே திலீப் இதைத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. திட்டமிட்டு என்னை சிக்க வைத்து உள்ளதாக நடிகர் திலீப் தெரிவித்தார். இந்நிலையில், சிறையில் இருந்தவாறு மலையாள நடிகர் திலீப்புக்கு, பல்சர் சுனில் எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

வழக்கை முழுவதுமாக வேறு திசைக்கு திருப்பிய அந்த கடிதத்தால் மலையாள திரையுலகமே அதிர்ந்தது. இதன் பின்னர், நடிகைக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தலில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக மலையாள நடிகைகள் உள்ளிட்டோர் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முறையிட்டனர். இதையடுத்து, வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. நடிகர் திலீப், இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக்குழு, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடிகர் திலீப்பை கைது செய்தது.

நடிகர் திலீப்புக்கு எதிராக மலையாள திரையுலகில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அவர் வகித்த மலையாள திரைப்பட சங்க பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், ஜாமீனில் வெளியே வந்தார். எனினும், சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நீதிபதி ஹனி வர்கீஸ்-ஐ வழக்கின் தனி நீதிபதியாக நியமித்து கேரள அரசு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கைதான விஷ்ணு உள்ளிட்ட இருவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறி வாக்குமூலம் அளித்தனர். வழக்கின் விசாரணை 2018ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், அதன் பிறகு கொரோனா காரணமாக இரு ஆண்டுகள் வழக்கு விசாரணை முடங்கியது. அதன் பிறகும் கூட பல்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை தாமதமாகிக் கொண்டே வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை 1600 ஆவணங்கள், 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம் வர்கீஸ், நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில் நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திலீப் உள்ளிட்ட 10 பேர் குற்றம்சாட்டப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹனி வர்கீஸ் இன்று வெளியிட்டார். இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், குற்றம் நிரூபிக்கப்படாததாலும் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திலீப்பின் நண்பர் சரத் மீதும் போதிய ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டார். ஏ1 முதல் ஏ6 வரையிலான குற்றவாளிகளான சுனில் மற்றும் மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீ, பிரதீப் ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 12-ந்தேதி அறிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கில் இருந்து விடுதலையான திலீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கை வைத்து எனது தொழில் வாழ்க்கையை அழிக்க சதி நடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி என்று நடிகர் திலீப் தெரிவித்தார். இதனிடையே, திலீப் விடுவிக்கப்பட்டதை ஏற்க முடியாது எனவும், போலீசார் வழக்கை சரியாக விசாரித்து ஆதாரங்களை சேகரிக்கவில்லை என பல்வேறு சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement