கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை உடனே கைவிட வேண்டும் என்றும், மீறி அணை கட்ட முயன்றால் தமிழகம் முழுவதும் பெண்களைத் திரட்டி மாபெரும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தமிழ்தேசிய பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான ‘மகளிர் ஆயம்’ மாநிலத் தலைவர் அருணா அதிரடியாக எச்சரித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற மகளிர் ஆயம் அமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின், அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
தமிழக அரசு அண்மையில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்திருந்தாலும், எந்தெந்த கடைகள் மூடப்படுகின்றன என்ற தெளிவான விபரங்களை வெளியிடவில்லை. கடந்த ஆட்சியிலும் 500 கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்பட்டதும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கைதான். அரசு மது விற்பனையைக் கட்டுப்படுத்தி, டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும்; மதுவால் குடும்பங்களும் சமூக அமைதியும் சீர்குலைந்து வருகின்றன. மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க அரசு முன்வர வேண்டும்.
பாலியல் குற்றங்களுக்கு 6 மாதத்தில் தண்டனை: தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள் மற்றும் முதியோர் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதனைத் தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரும் கடுமையான நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும்.
மேகதாது விவகாரத்தில் பெண்கள் போராட்டம்: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு மத்திய அரசும் ஒத்துழைப்பது போலத் தெரிகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் நீர்வளம் பாதிக்கப்பட்டு, விவசாயம் சீர்குலைந்து வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அணை கட்டும் முயற்சி நடந்தால் ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களையும் திரட்டி அசுர வேகத்தில் போராட்டங்கள் வெடிக்கும்.
