தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் கரூரைச் சேர்ந்த கனகராஜ் ஆகிய இருவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏ-க்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு நிவாரணம் கோரித் திருப்பூர் காங்கேயத்தைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் ஜாமீன் மனுவையும், கரூர் செங்குந்தபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் முன்ஜாமீன் மனுவையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, மருத்துவர் ராஜசேகருக்கு நிபந்தனை ஜாமீனும், கரூரைச் சேர்ந்த கனகராஜுக்கு முன்ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை நோக்கித் திருவல்லிக்கேணி காவல்துறையினர் நகர்ந்து வருகின்றனர்.













