Advertisement

அரசியல் ஆதாயம் பெற திமுக எதிர்ப்பு – தொகுதி மறுவரையறை குறித்து குஷ்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அதிமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீவுக்கு ஆதரவாக பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மற்றும் மாநில அரசை கடுமையாக விமர்சித்தார்.

“மத்திய அரசு கொண்டு வரும் எந்தச் சட்டத்திற்கும் திமுக எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமாகி விட்டது. அவர்கள் செய்ய முடியாத பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தொகுதி மறுவரைவு சட்டம் கொண்டு வரப்படுவது திமுகக்கு மட்டும் பாதிப்பு தருகிறதா? இந்தியா முழுவதும் இதற்கு எதிர்ப்பு எங்காவது நடைபெறுகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

Advertisement

தொடர்ந்து அவர், “மற்ற மாநிலங்களில் எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில், திமுக மட்டும் போராட்டம் நடத்துவது அரசியல் நோக்கத்தைக் காட்டுகிறது. வரவிருக்கும் தேர்தலில் தோல்வி பயம் திமுகவுக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் தான் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார்.

மேலும், சமீபத்திய போராட்டங்களை குறிப்பிட்டு, “பிளாஸ்டிக் தடை அமலில் இருக்கும் நிலையில், பிளாஸ்டிக் லைட்டரை பயன்படுத்தி போராட்டம் நடத்துவது எப்படி? அடிப்படை விழிப்புணர்வே இல்லாமல் மக்கள் நலன் குறித்து பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது,” என அவர் விமர்சித்தார்.

Advertisement

மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் கருத்து குறித்து கேட்டபோது, “அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால் அவரது கருத்துக்கு திமுகதான் பதில் அளிக்க வேண்டும்,” எனக் கூறினார்.

திமுக மூத்த தலைவர்களின் பேச்சு குறித்து, “தகாத வார்த்தைகள் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. அரசியல் விமர்சனத்தை நாகரிகமாக நடத்த வேண்டும். மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதையே நாங்கள் கேட்கிறோம்,” என்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சையும் விமர்சித்த குஷ்பு, “மிரட்டல் போன்று பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலில் மரியாதை மற்றும் சுயமரியாதை முக்கியம்,” என்று கூறினார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement