Home செங்கல்பட்டு கீரப்பாக்கம்: மொபைல் டவர் அமைக்க கோரிக்கை

கீரப்பாக்கம்: மொபைல் டவர் அமைக்க கோரிக்கை

0

கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் மொபைல் போன் சிக்னல் பிரச்சனை நீடித்து வருவதால், உடனடியாக மொபைல் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியின் 4-வது வார்டில் உள்ள விநாயகபுரம் பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு சுமார் 1,760 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த குடியிருப்பில் பல ஆண்டுகளாக மொபைல் போன் சிக்னல் சரிவர கிடைக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அவசர அழைப்புகள் செய்வது, ஆன்லைன் சேவைகள் பயன்படுத்துவது, மாணவர்கள் இணையவழி கல்வி பெறுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் கடந்த மாதம் 21-ம் தேதி எல்காட் நிறுவனம் சார்பில் 11-வது பிளாக்கில் மொபைல் டவர் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 11-வது பிளாக்கில் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, குடியிருப்பு வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் டவர் அமைக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு பகுதி மக்கள் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், மொபைல் டவர் அமைப்பது தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட உதவி கோட்ட பொறியாளர் மோகன்ராஜ், உதவி பொறியாளர்கள் ஸ்ரீராம் மற்றும் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அப்போது அதிகாரிகள் பேசுகையில், “11-வது பிளாக்கில் தான் முழுமையான சிக்னல் கிடைக்கிறது. அங்கு டவர் அமைப்பதற்கான கட்டட உறுதித்தன்மை சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பெறப்பட்டுள்ளன. டவர் மூலம் எந்தவித அணுக்கதிர் பாதிப்பும் ஏற்படாது” என்று விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து, மொபைல் சிக்னல் பிரச்சனையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனர்.

NO COMMENTS

Exit mobile version