சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த முன்னறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்து பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.
காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் திடீரென மழை தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால் காஞ்சிபுரம் நகரம் மற்றும் பல்வேறு புறநகர் பகுதிகள் குளிர்ச்சியான சூழலை பெற்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள், ஒலிமுகமது பேட்டை, திம்மசமுத்திரம், கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், பாலுசெட்டி சத்திரம், தாமல், விஷார், விப்பேடு, செவிலிமேடு, ஐயங்கார்குளம், ஓரிக்கை, களக்காட்டூர், தேனம்பாக்கம், நத்தப்பேட்டை, கருக்குப்பேட்டை, ஏனாத்தூர், வையாவூர், களியனூர், காரை மற்றும் பரந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பதிவானது.
கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் மற்றும் வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், இந்த கனமழையால் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மழை காரணமாக வெப்பநிலை குறைந்து, குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
விவசாயிகளும் இந்த மழையை வரவேற்றுள்ளனர். கோடை வெப்பத்தால் வறண்டு காணப்பட்ட நிலப்பரப்புகள் மற்றும் நீர்நிலைகளுக்கு இந்த மழை ஓரளவு உதவியாக இருக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
