அதிமுகவுடனான புரட்சி பாரதம் கட்சியின் கூட்டணி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலோடு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், தற்போது தாங்கள் எந்தவொரு கூட்டணியிலும் இல்லை என்றும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நிழல் நிதிநிலை அறிக்கையை (Shadow Budget) வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தங்களது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அதிமுக உடனான கூட்டணி குறித்த நிருபர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “அதிமுக உடனான எங்கள் கூட்டணி கடந்த பேரவைத் தேர்தலோடு முடிந்துவிட்டது.
தற்போதைய சூழலில் நாங்கள் எந்தவொரு கூட்டணியிலும் இல்லை; தனித்தே இயங்கி வருகிறோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த அவர், “உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.
தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போது, சூழலுக்கு ஏற்பக் கூட்டணி குறித்து உரிய நிலைப்பாடு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். ஜெகன் மூர்த்தியின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.













