Advertisement

60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது!

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் போர் பதற்றங்கள் நிலவினாலும், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (CII) வருடாந்திர வர்த்தக உச்சி மாநாட்டில் இன்று கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாட்டின் எரிபொருள் கையிருப்பு மற்றும் விலை நிலவரம் குறித்து விரிவான விளக்கம் அளித்தார். வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்மோஸ் ஜலசந்தியில் நிலவும் போக்குவரத்துச் சிக்கல்கள் குறித்துக் கவலைகள் எழுந்துள்ள நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் தற்போது 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது.

இதேபோல் 60 நாட்களுக்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயு (LNG) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவைப் பொறுத்தவரை 45 நாட்களுக்குத் தேவையான (Rolling Stock) கையிருப்பு உள்ளது.
போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, நாளொன்றுக்கு 36,000 டன்னாக இருந்த எல்.பி.ஜி உற்பத்தி, தற்போது 54,000 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். எண்ணெய் பொருட்கள் விலை உயர்த்தப்படவே மாட்டாது என நாங்கள் எங்கும் சொல்லவில்லை. ஆனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50-60% உயர்ந்தபோதும், இந்தியாவில் விலை நிலையாகவே வைக்கப்பட்டுள்ளது என்றார்.

எரிபொருள் விலை உயர்விற்கும் தேர்தலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்தார். சர்வதேச விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும், அதனை நிறுவனங்களே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வளைகுடா நாடுகளில் போர் பாதிப்பு நீடிப்பதால், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கியப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியைக் (Strait of Hormuz) கடப்பதில் இன்னமும் சிக்கல் நீடிப்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், இந்தியா தனது விநியோகச் சங்கிலியை (Supply Chain) முறையாக நிர்வகித்து வருவதால் தட்டுப்பாடு ஏற்படாது என உறுதியளித்தார்.

பொதுமக்கள் யாரும் பீதியடைந்து எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டாம் என்றும், பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கை கோரிக்கையைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement