அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்டச் செயலாளருமான பி. பெஞ்சமின் அவர்கள் இன்று தனது ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் முறைப்படி இணைந்தார்.
அண்மையில் புதிய அரசு அமைந்த பிறகு நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தாண்டி, சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவாக வாக்களித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், தவெக தரப்பிற்கு ஆதரவு அளித்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகளைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீக்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நீக்க நடவடிக்கை, பெஞ்சமின் தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சிக்காக உழைத்த தன்னை, எந்தவொரு விளக்கமும் கேட்காமல் நீக்கியது ஏன் என்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதிமுக தலைமைக்கு எதிராகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த பெஞ்சமின், தற்பொழுது தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய முடிவெடுத்தார். அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்துத் தன்னை முறைப்படி திமுகவில் இணைத்துக் கொண்டார். இவருடன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான குழந்தைவேலு உள்ளிட்ட திரளான அதிமுக பொறுப்பாளர்களும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட அதிமுக வட்டாரங்களில் முக்கியப் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தற்பொழுது திமுகவில் இணைந்திருப்பது, வட தமிழக அரசியல் வட்டாரங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
