செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் அருகே மதுபோதையில் அசுர வேகத்தில் பைக்கை இயக்கி நிலைதடுமாறி விழுந்த சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற வாலிபர், லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுபோதையில் அசுர வேகத்தில் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்த விபத்தில், பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறி வாலிபர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி கொடூரமாக உயிரிழந்தார்.
சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (36). இவருடைய நண்பர் விக்னேஷ் (27). விக்னேஷ் மீது திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குகளின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் விக்னேஷுக்கு இருந்ததால், தனது நண்பர் வெங்கடேஷைத் துணைக்கு அழைத்துக் கொண்டு மேடவாக்கம் பகுதியில் இருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியிலேயே நண்பர்கள் இருவரும் அதிக அளவில் மது அருந்தியதாகத் தெரிகிறது. போதை தலைக்கேறிய நிலையிலும், இருவரும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் பயணித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி அருகே வந்தபோது மேலும் மது அருந்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே விக்னேஷை பைக்கிலிருந்து கீழே இறக்கிவிட்ட வெங்கடேஷ், “நீ இங்கேயே நின்று சைடிஷ் வாங்கி வை, நான் மதுபாட்டில் வாங்கிட்டு வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் புறப்பட்டுள்ளார்.
அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால், வெங்கடேஷால் வாகனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லை. நெடுஞ்சாலையில் பைக் சென்றுகொண்டிருந்தபோதே, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி வெங்கடேஷ் கீழே விழுந்தார். அப்போது துரதிர்ஷ்டவசமாக அதே நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாகப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, கண் இமைக்கும் நேரத்தில் கீழே விழுந்த வெங்கடேஷின் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில் தலை முற்றிலும் நசுங்கி ரத்த வெள்ளத்தில் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த பயங்கர விபத்து குறித்து உடனடியாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் அதன் ஓட்டுநர் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்திற்குச் செல்லவிருந்த நிலையில் மதுபோதையால் வாலிபர் ஒருவர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
