Advertisement

ஆதரவற்ற குழந்தைகளுக்கு விமானப் பயணம்! நனவான ஏழை மாணவர்களின் கனவு!

“நம்மளும் ஒரு தடவையாவது அந்த விமானத்துல பறக்க மாட்டோமா?” என்று அண்ணாந்து பார்த்த குழந்தைகளுக்கு, அந்த வானமே வசப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் இன்று அரங்கேறியுள்ளது. கோவை ரவுண்ட் டேபிள் நார்த் மற்றும் லேடீஸ் சர்க்கிள் ஆகிய அமைப்புகள் இணைந்து, ‘ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி’ (Flight of Fantasy) என்ற உன்னதத் திட்டத்தின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு முதல்முறை விமானப் பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, கோவையின் போத்தனூர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள் இந்தச் சிறப்புப் பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக இன்று காலைக் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு உற்சாகத்துடன் வந்தடைந்த குழந்தைகள், தங்களைச் சுற்றி நின்ற பிரம்மாண்டமான விமானங்களைக் கண்டு வியப்பிலும் மகிழ்ச்சியிலும் திளைத்தனர்.

Advertisement

தன்னார்வ அமைப்பினர் இந்தக் குழந்தைகளைக் கோவையிலிருந்து சென்னைக்கு ஒரு நாள் சுற்றுலாவாக விமானத்தில் அழைத்துச் சென்றனர். வெறும் பயணமாக மட்டுமில்லாமல், செக்-இன் நடைமுறைகள் முதல் மேகங்களுக்கு மேலே பறக்கும் அந்த அற்புத அனுபவம் வரை அனைத்தும் மாணவர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

இது குறித்துத் தன்னார்வ அமைப்பினர் கூறுகையில், “ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளின் தீராத கனவை நனவாக்கும்போது அவர்களின் முகத்தில் மலரும் புன்னகையே எங்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய விருது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். விமான நிலையத்தில் இருந்த சக பயணிகள் பலரும், குழந்தைகளின் இந்தத் துள்ளலான பயணத்தைக் கண்டு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement