Advertisement

சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்: விரைவில் களமிறங்கும் 2-வது ஏ.சி. மின்சார ரயில்!

சென்னை, 2026 ஏப்ரல் 24: சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் வேளையில், மின்சார ரயில் பயணிகளுக்குக் குளிர்ச்சியான செய்தியைத் தெற்கு ரயில்வே வழங்கியுள்ளது. பொதுமக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ள ஏ.சி. மின்சார ரயில் சேவையின் இரண்டாம் கட்டமாக, புதிய ஏ.சி. ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் ஆகிய முக்கிய மார்க்கங்களில் ‘பீக் ஹவர்ஸில்’ (Peak Hours) நிலவும் அதீத கூட்ட நெரிசலைக் குறைக்கக் கூடுதல் ஏ.சி. ரயில்களை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்தது. இதன்பேரில், சென்னை ஐ.சி.எஃப் (ICF) தொழிற்சாலையில் அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகளைக் கொண்ட இரண்டாவது ஏ.சி. மின்சார ரயில் தற்போது தயார் நிலையில் உள்ளது.

Advertisement

அண்ணனூர் ரயில்வே யார்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ரயிலில், தானியங்கி கதவுகள் மற்றும் குளிர்சாதன வசதிகளின் உறுதித்தன்மை குறித்த தொழில்நுட்ப சோதனைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் புதிய ரயிலின் சிறப்பம்சம் என்னவென்றால், 12 பெட்டிகளில் அமர்ந்து கொண்டு 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். தினசரி 4 லட்சம் பயணிகள் பயணிக்கும் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் தடத்தில் இந்த ரயிலை இயக்க அதிகாரிகள் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

Advertisement

அதேசமயம் செங்கல்பட்டு மார்க்கத்திலும் மற்றுமொரு ரயிலுக்கான பரிந்துரை நிலுவையில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் சோதனைகள் நிறைவடைந்து, மே மாத தொடக்கத்தில் சென்னை மக்களின் பயன்பாட்டிற்கு இந்தப் புதிய ‘கூல்’ ரயில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement