சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக குறைந்து நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் தங்கம் விலையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதன் எதிரொலியாக தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
நேற்றுமுன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும், சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,13,600க்கும் விற்பனையானது. பின்னர் நேற்று திடீரென சரிவு ஏற்பட்டு, ஒரு கிராம் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.13,800க்கும், சவரன் ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.300 குறைந்து ரூ.13,500க்கு விற்பனையாகிறது. அதேபோல் சவரன் தங்கத்தின் விலை ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலை நிலையான நிலையில் தொடர்கிறது.
தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து வரும் நாட்களில் தங்கம் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
