செங்கல்பட்டு அருகே அதிமுக தொடர்ந்து தேர்தலில் தோல்விகளைச் சந்தித்து வருவதாலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி வருவதாலும் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, அண்ணா தொழிற்சங்க மண்டல துணைத் தலைவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வேதநாராயணபுரம் துளசிங்கநகர் 4-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (55). இவர் செங்கல்பட்டு அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் கடந்த 28 ஆண்டுகளாக மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். மேலும், அதிமுக-வின் அண்ணா தொழிற்சங்கத்தில் காஞ்சிபுரம் மண்டல துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதுடன், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் அமர முடியாத சூழல் நிலவி வருகிறது. இது ஒருபுறமிருக்க, கட்சியில் முக்கியப் பதவிகளில் இருந்த பலர் தினந்தோறும் விலகி மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அண்மையில் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் கடுமையான மன வருத்தத்தில் இருந்த ரவிக்குமார், இரவு பணிக்குச் செல்லாமல் தனது வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாட்டுக்கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ரவிக்குமாரைப் பார்த்த அவரது மூத்த மருமகன் அருண்குமார், இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், ரவிக்குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரவிக்குமாரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தீவிர அதிமுக பற்றாளரான போக்குவரத்துப் பணிமனை ஊழியர் கட்சியின் நிலைக்காகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவரது உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.













