மதுராந்தகம் இடைத்தேர்தல்: திமுக ஆலோசனைக் கூட்டம்

0
2

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், பின்னர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததுடன், தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததுடன், இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கரிக்கிலி, வேடந்தாங்கல், தண்டரைப்பேட்டை, தண்டலம், கோழியாளம் உள்ளிட்ட கிராமங்களில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் கலந்துகொண்டு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்கான தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். மேலும், சமூக வலைதளங்களை தேர்தல் பிரசாரத்திற்கு திறம்பட பயன்படுத்துவது, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டுவது மற்றும் கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து அதனை சரிசெய்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தம்பு, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், மாவட்ட கவுன்சிலர் மாலதி, அவைத்தலைவர் சிவபெருமான், ஒன்றிய துணைச் செயலாளர் வேதாச்சலம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.