செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் சத்யா நகரில் நள்ளிரவில் டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முறையிட்ட மக்களிடம் மின்வாரிய பெண் அதிகாரி அலட்சியமாகப் பேசிவிட்டு ஓட்டம் பிடித்த வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே நள்ளிரவில் மின்மாற்றி (Transformer) திடீரென தீப்பற்றி எரிந்ததால், சத்யா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் நள்ளிரவு முதல் இருளில் மூழ்கி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதிய மாற்று மின்மாற்றியை அமைக்கும் பணியில் மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக இப்பகுதி மக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
சிங்கப்பெருமாள் கோவில் சத்யா நகர் பகுதியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் முக்கிய மின் விநியோக ஆதாரமாக உள்ள பிரதான டிரான்ஸ்பார்மர் நேற்று நள்ளிரவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. முற்றிலும் பழுதடைந்த இந்த மின்மாற்றிக்கு மாற்றாகப் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தால் மட்டுமே மீண்டும் மின் விநியோகம் வழங்க முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விபத்து நடந்து பல மணி நேரங்கள் கடந்தும் புதிய மின்மாற்றியை அமைப்பதற்கான எவ்வித உள்கட்டமைப்பு மற்றும் ஆரம்பக்கட்ட பணிகளையும் மின்சாரத்துறை ஊழியர்கள் தொடங்கவில்லை எனத் தெரிகிறது.
இப்படியான சூழலில், மின்சாரம் எப்போது வரும் என்று நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று கேட்டபோது, அங்கிருந்த மின் செயற் பொறியாளர் (EE) ஜெயராணி இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டே மிகவும் பொறுப்பற்ற முறையிலும் அலட்சியமாகவும் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது; மாறி மாறி என்னை இப்படி தொந்தரவு செய்தால் நான் எப்படி வேலை செய்ய முடியும்? காலை 10 மணிக்கு என்னை எஸ்சி (SE) அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள், இதுவரை என்னை அங்கிருந்து விடவில்லை. பாரதியார் தெருவில் ஒரு குரூப் என்னை ஒரு மணி நேரம் லாக் செய்துவிட்டார்கள், இன்னொரு குரூப் வேறு இடத்தில் லாக் செய்துவிட்டது; பிறகு நான் எப்படி வேலை செய்ய முடியும்? இருங்க, நான் போறேன்” எனக் கூறிவிட்டுப் பொதுமக்களுக்கு உரிய பதிலளிக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடிப்பதிலேயே அவர் குறியாக இருந்தது நுகர்வோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், நள்ளிரவு முதல் மின்சாரம் இல்லாததால் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி விடிய விடியத் தவித்து வருகின்றனர். மின்சாரம் எப்போது வரும், டிரான்ஸ்பார்மர் எப்போது சரிசெய்யப்படும் என விழி மேல் விழி வைத்து மக்கள் காத்துக் கிடக்கின்றனர். எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) உயர் அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் புதிய டிரான்ஸ்பார்மரை அமைத்துத் தடையில்லா மின்சாரத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சத்யா நகர் பகுதி மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.





