Home செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே பெருச்சாலியை வாயில் கவ்வியபடி உலா வந்த 12 அடி ராட்சத பாம்பு!

அரசு மருத்துவமனை எதிரே பெருச்சாலியை வாயில் கவ்வியபடி உலா வந்த 12 அடி ராட்சத பாம்பு!

0

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 12 அடி நீளமுள்ள ராட்சத சாரைப்பாம்பு ஒன்று பெரிய பெருச்சாலியை வாயில் கவ்வியபடி உலா வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு எதிரே, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஒரு பிரபல கிறிஸ்தவப் பள்ளி அமைந்துள்ளது. இதன் மதில் சுவரை ஒட்டியுள்ள முக்கிய சாலையில் எப்போதும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், அந்தப் பகுதியில் திடீரென 12 அடிக்கும் அதிகமான நீளமுள்ள ராட்சத சாரைப்பாம்பு ஒன்று அங்கும் இங்குமாக உலா வரத் தொடங்கியது. அந்தப் பாம்பு, தான் வேட்டையாடிய பெரிய பெருச்சாலி ஒன்றை வாயில் கவ்விக்கொண்டிருந்தது. ஆனால், பெருச்சாலியின் அளவு மிகவும் பெரிதாக இருந்ததால், பாம்பால் அதை முழுமையாக விழுங்கவும் முடியாமல், வெளியில் விடவும் முடியாமல் தவித்தது.

பெருச்சாலியைக் கவ்வியபடியே அங்கும் இங்குமாக நகர்ந்து அந்த ராட்சத பாம்பு நடத்திய வாழ்வா சாவா போராட்டம் பார்ப்பவர்களைப் பதறவைக்கும் காட்சியாக இருந்தது. பொதுவாக மனிதர்களைக் கண்டால் ஓடி ஒளிரும் பாம்புகள், நகரின் மையப்பகுதியில் இப்படிப் பொதுவெளியில் உலா வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும், அவ்வழியாகச் சென்ற சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த அரிய மற்றும் நெஞ்சை பதறவைக்கும் இயற்கையின் காட்சியை வியப்புடனும் அச்சத்துடனும் பார்த்து ரசித்தனர்.

NO COMMENTS

Exit mobile version