Advertisement

செங்கம் அருகே 70 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. திருவண்ணாமலையில் பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, வீட்டில் தனியாக இருந்த கண்பார்வைக் குறைபாடுடைய மூதாட்டியைத் தாக்கி, நகைகளைப் பறித்துவிட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கம் அடுத்த வளையாம்பட்டு பகுதியில் வசித்து வரும் 70 வயதான மூதாட்டி சுசீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வரும் இவருக்குக் கண்பார்வை சற்றே குறைவு எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இவர் தனது வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து இந்த அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளார்.

Advertisement

சம்பவம் நடைபெற்ற அன்று இரவு சுமார் 11 மணியளவில், மூதாட்டி வீட்டின் வெளியே சென்றுவிட்டு மீண்டும் உள்ளே வந்தபோது, ஏற்கனவே வீட்டிற்குள் பதுங்கியிருந்த அந்த மர்ம நபர் இவரை வழிமறித்துள்ளார்.
கூச்சலிட்டால் கொன்றுவிடுவேன்” என மிரட்டி மூதாட்டியின் வாயைத் துணியால் மூடிய அந்த நபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த அரை பவுன் தங்கத் தாலி, தங்கக் குண்டுகள் மற்றும் காதில் இருந்த தோடுகளைப் பறித்துள்ளார். நகை பறிப்புடன் நிற்காமல், அந்த மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர் ரத்தக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த செங்கம் காவல்துறையினர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினர்.

Advertisement

தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், ‘வீரா’ என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளி தப்பிச் சென்ற திசையைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சியாமளா தேவி நேரில் வந்து விசாரணை நடத்தி, குற்றவாளியை விரைந்து கைது செய்யத் தனிப்படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

செங்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மூதாட்டியின் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனியாக வசிக்கும் முதியோர்களைக் குறிவைத்து நடைபெறும் இத்தகையக் கொடூரச் சம்பவங்கள் தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement